search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் கோட்டாட்சியர் விசாரணை"

    கரூர் அருகே தண்ணீர் தொட்டியில் குழந்தையை அமுக்கி கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகள் மனோபிரியா (வயது 28). இவருக்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் செவந்தபாளையத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோகிதா என்ற 11 மாத குழந்தை இருந்தது. மகேஷ் பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    மனோபிரியா தனது குழந்தையுடன் நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து வந்தார். அப்போது தன்னையும், குழந்தையையும் பெங்களூருக்கு அழைத்து செல்லுங்கள் என கணவர் மகேஷிடம் போனில் மனோபிரியா அடிக்கடி கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும் குழந்தை சற்று வளர்ந்ததும் கூட்டி செல்கிறேன் என மகேஷ் தெரிவித்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த மனோபிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம், சங்கரன்பாளையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். பின்னர் குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பெற்றோரிடம் முறையிட்டார். அப்போது அவர்கள் தங்களது மகளுக்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் மனோபிரியா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென அங்கிருந்த சிமெண்டு தண்ணீர் தொட்டிக்குள் தனது குழந்தை மோகிதாவை அமுக்கி கொலை செய்தார். அதனை தொடர்ந்து அவர் வீட்டின் அறையில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்ததும், மனோபிரியா, அவரது கைக்குழந்தை மோகிதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், மனோபிரியா, மோகிதா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு வரும்போதே விபரீத முடிவினை தேடிக்கொள்ளும் எண்ணத்திலேயே மனோபிரியா வந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனோபிரியா தற்கொலை செய்து கொண்டதால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×